பாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்

1 mins read
54c5a04e-6a13-402c-9ee0-7ba18652412c
ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்துள்ளார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய டெல்லியின் முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் திங்கட்கிழமை (நவம்பர் 18) பாஜகவில் இணைந்தார்.

கட்சி எதிர்கொள்ளும் அண்மைய சர்ச்சைகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை தமது பதவி விலகல் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் பதிலாக, கட்சி தனது சொந்த கொள்கைகளுக்காகப் போராடுவதில் மும்முரமாக உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

“இது எனக்கு எளிதான ஒன்றல்ல. அன்னா ஹசாரே காலத்திலிருந்தே ஆம் ஆத்மியின் ஒரு பகுதியாக இருந்தேன் (ஊழல் எதிர்ப்புப் போராளியான அவரது மக்கள் இயக்கம், ஆம் ஆத்மி உருவாக தளம் அமைத்தது). டெல்லிக்காக எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் உழைத்துள்ளேன்,” என்று பாஜகவில் இணைந்த பின் திரு கெலாட் கூறினார்.

“சிலர் இது ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு. அல்லது அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் அழுத்தம் காரணமாக நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை,” என்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், புலனாய்வு அமைப்புகளின் அழுத்தம் குறித்த ஊகங்களை உறுதியாக நிராகரித்தார்.

நஜாஃப்கா் சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வான கைலாஷ் கெலாட்டின் பதவி விலகலை டெல்லி முதல்வா் அதிஷி ஏற்றுக்கொண்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லி பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், கெலாட்டின் விலகல் ஆம் ஆத்மி கட்சிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்