புதுடெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களுக்கு ரூ.1,323 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி தொழிலதிபர் கலாநிதி மாறனும் கேஏஎல் ஏர்வேஸ் நிறுவனமும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை 23) தள்ளுபடி செய்தது.
அதுதொடர்பான மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது. அதனை எதிர்த்து, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான மாறனும் கேஏஎல் நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தை நாடின.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இந்நாள், முன்னாள் உரிமையாளர்களுக்கு இடையே நீண்டகாலமாக நடந்துவந்த சட்டப் போராட்டம் இத்துடன் முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நடுவர் தீர்ப்பாயமும் திரு மாறன் தரப்புக் கோரிக்கையை ஏற்க மறுத்திருந்தது.
கடந்த 2015ஆம் ஆண்டில் திரு மாறனும் கேஏஎல் நிறுவனமும் ஒரு பங்கு ரூ.2 என்ற விலைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 58.46% பங்குகளைத் திரு அஜய் சிங் என்பவருக்குக் கைமாற்றினர்.
அப்போது செய்துகொண்ட உடன்பாட்டின்படி, ஸ்பைஸ்ஜெட்டிற்காகத் திரு மாறனும் கேஏஎல் நிறுவனமும் ரூ.679 கோடி செலவழித்த நிலையில், அவர்களுக்கு ஈட்டுப் பங்குகளும் முன்னுரிமைப் பங்குகளும் வழங்கப்பட வேண்டும்.
இந்நிலையில், அத்தகைய பங்குகளோ பணமோ வழங்கப்படவில்லை என்று கூறி, 2017ல் திரு மாறன் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார்.
பின்னர் 2018ஆம் ஆண்டில் திரு மாறனின் கோரிக்கையை ஏற்க மறுத்த நடுவர் தீர்ப்பாயம், அவருக்கும் கேஏஎல் நிறுவனத்திற்கும் ரூ.579 கோடி வழங்க உத்தரவிட்டது.
அதன்பின், அவ்வழக்கு பலமுறை டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. கடந்த 2024 மே மாதம், ரூ.1,323 கோடி இழப்பீடு தொடர்பில் திரு மாறனும் கேஏஎல் நிறுவனமும் முன்வைத்த கோரிக்கைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வன்மையாக மறுத்தது.