சென்னை: ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கான திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுவதும் உள்ள 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமல்ஹாசன் எக்ஸ் தளப் பதிவில், “இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகுக்குமானது. என்னைச் செதுக்கிய எண்ணிலடங்கா கதைசொல்லிகளுக்கானது. இந்திய சினிமா இவ்வுலகிற்கு நிறைய வழங்க உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக இணையவுள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி திரு கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்.
“மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது!” என்று வாழ்த்தியுள்ளார்.
“சினிமாவின் ஒவ்வோர் அங்கத்திலும் கமல்ஹாசன் செலுத்திய ஆதிக்கம், பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. அவர் உண்மையிலேயே கலையின் வித்தகர்.
இன்னும் பல ஆண்டுகள் உலக சினிமாவுக்கு அவர் சேவையாற்ற வாழ்த்துகிறேன்,” என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தனது எக்ஸ் தளப் பதிவு வழி வாழ்த்து கூறியுள்ளார்.