மங்களூரு: பாரம்பரிய எருமைப் பந்தயமான ஜெய விஜய ஜோடுகரெ கம்பளாவில் இவ்வாண்டு 320க்கும் மேற்பட்ட எருமைகள் பங்கேற்றன.
தமிழ்நாட்டின் எருதுபூட்டு போன்ற கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கம்பளா எனும் எருமைப் பந்தயங்கள் காலங்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கென்றே எருமைகள் தயார்செய்யப்படுவது வழக்கம்.
அவ்வகையில், இருநாள் நிகழ்வாக மங்களூரு நகரின் நேத்ராவதி ஆற்றங்கரையோரம் சனிக்கிழமை (பிப்ரவரி 8) கம்பளா பந்தயம் தொடங்கியது.
நீரில் எருமைகள் ஓடும் இப்பந்தயத்தைக் காண அக்கம்பக்க வட்டாரங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
தங்களது பயிர்களைக் காக்கும் கடவுள்களுக்கு விவசாயிகள் நன்றி செலுத்தும் ஒரு வழிமுறையாகக் கம்பளா பந்தயம் தொடங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
வழக்கமாக, நவம்பர் மாதத்தில் தொடங்கும் கம்பளா பருவம் மார்ச் மாதம்வரை நீடிக்கும்.
கம்பளா சங்கங்கள் மூலம் இப்பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இப்போதைக்கு மொத்தம் 18 கம்பளா சங்கங்கள் இருக்கின்றன. கடலோரக் கர்நாடகத்தில் ஆண்டுதோறும் 45க்கும் அதிகமான கம்பளா பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பில் கம்பளா பந்தயத்தை நடத்துவதும் அதில் பங்கேற்பதும் கௌரவமாகக் கருதப்பட்டது.