பெங்களூரு: நடைபாதையில் நடந்துசென்ற கணவன்-மனைவிமீது கன்னட நடிகர் நாகபூஷணாவின் கார் மோதியதில், அப்பெண் மாண்டுபோனார்.
காயமடைந்த கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, நாகபூஷணாவைக் காவல்துறை கைதுசெய்தது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது.
இதன் தொடர்பில் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. காரை வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதே விபத்திற்குக் காரணம் என்று காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.
காயமடைந்த இருவரையும் நாகபூஷணா தமது காரிலேயே மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதாகக் கூறப்பட்டது.
ஆயினும், பிரேமா, 48, என்ற அப்பெண் வழியிலேயே மாண்டுபோனார். அவருடைய கணவர் கிருஷ்ணா, 58, கால்களிலும் தலையிலும் வயிற்றிலும் காயமடைந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்துவரும் நாகபூஷணா, அவ்வாண்டு சமந்தா நடிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியான ‘யு டர்ன்’ படத்திலும் நடித்துள்ளார்.