ரூ.5,600 கோடி இணைய மோசடிக் கும்பலைக் கைது செய்த கான்பூர் காவல்துறை

ரூ.5,600 கோடி இணைய மோசடிக் கும்பலைக் கைது செய்த கான்பூர் காவல்துறை

2 mins read
9611e0f0-6b94-4571-961f-88aea0ae8945
அதிக வட்டி, குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அப்பாவி மக்களை அந்தக் கும்பல் வலையில் வீழ்த்தியுள்ளது. - சித்திரிப்புப் படம்: இந்தியா டுடே

கான்பூர்: அதிக லாபம் தருவதாகக் கூறி இணையவழி முதலீடு, சூதாட்டச் செயலிகள் மூலம் ரூ.5,600 கோடி வரை நிதி மோசடி செய்த பிரம்மாண்ட இணைய மோசடிக் கும்பலைக் கான்பூர் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை, இணையக் குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கான்பூரின் ஜாஜ்மாவ் பகுதியில் ஒரு சாதாரண அலுவலகம் போல இயங்கிவந்த அந்த மையத்தைச் சோதனையிட்ட காவல்துறையினர், அங்கிருந்த ஷாஜேப் வாரிஸ் (24), முகமது சல்மான் (31) ஆகிய இரு குற்றவாளிகளைக் கைது செய்தனர்.

அந்த மோசடி மையத்தில் இருந்து ரூ.5,600 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மேலும் ஐந்து பேரைக் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

அதிக வட்டி, குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அப்பாவி மக்களை அந்தக் கும்பல் வலையில் வீழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பும் பணம், போலி நிறுவனங்களின் கணக்குகள், இணையவழி விளையாட்டுச் செயலிகள் வழியாகப் பல கட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. பின்னர், அந்தப் பணம் ரொக்கமாகப் பெறப்பட்டு ஹவாலா வழிகளிலும் பிற மாநிலங்களுக்கும் கடத்தப்பட்டுள்ளது.

கான்பூர் காவல் ஆணையர் ரகுவீர் லால் இது குறித்துத் தெரிவிக்கையில், 14 வெவ்வேறு வங்கிகளில் அந்தக் கும்பல் 72 சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குகளைத் திறந்து இயக்கி வந்ததாகக் கூறினார்.

டெல்லி, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்தக் கும்பலுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. தேசியக் குற்றப்பதிவு மையத்தில் மட்டும் அந்தக் கும்பல் மீது 86 புகார்கள் பதிவாகியுள்ளன.

சோதனையின்போது ரூ.65.26 லட்சம் ரொக்கம், போலி ஜிஎஸ்டி ஆவணங்கள், ஏடிஎம் அட்டைகள், கைப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பேசிகளில் இருந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அனைத்துலக அளவில் அந்தக் கும்பலுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்