பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலச் சுகாதாரத் துறை, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 967 போலி மருத்துவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள்மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2023 செப்டம்பர் முதல் 2025 ஜனவரி வரை, மாவட்டச் சுகாதார, குடும்ப நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் 449 போலி மருத்துவர்களுக்கு அறிவிப்புக் கடிதம் அனுப்பினர்; 228 மருந்தகங்களை மூடினர்.
மேலும் 167 மருந்தகங்கள் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மூடப்பட்டதாகவும் 96 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவற்றின் தொடர்பில் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
பீதர் (213), கோலார் (115), துமகூரு (112) ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான போலி மருத்துவர்கள் பிடிபட்டனர் என்று சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் மருத்துவர் விவேக் துரை தெரிவித்தார்.
அம்மாவட்டங்கள் எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எளிதாக கர்நாடகத்திற்குள் நுழைந்து, நாளொன்றுக்குச் சில மணி நேரம் போலி மருத்துவர்களாகச் செயல்பட முடிவதாக அவர் கூறினார்.
தலைநகர் பெங்களூரைப் போல அம்மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவ நிலையங்களும் இல்லை எனச் சொல்லப்படுகிறது.
பதிவுசெய்யாத மருத்துவர்கள் உரிய தகுதிச் சான்றிதழ்களைக் கொண்டிருக்கலாம் என்பதால், வழக்கமாக அவர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது என்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதில்லை என்றும் மருத்துவர் விவேக் சொன்னார்.

