தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்குச்சீட்டு முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கர்நாடகா முயற்சி

2 mins read
ae5a374f-eca6-474a-9c07-48af45715586
மக்கள் மத்தியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாக கர்நாடகா சட்ட அமைச்சர் எச்.கே. பாட்டீல் கூறியுள்ளார். - படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநில உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதில் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அம்மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் கர்நாடக அரசு பரிந்துரைத்து உள்ளது.

மக்கள் மத்தியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதால் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக சட்ட அமைச்சர் எச்.கே. பாட்டீல் கூறியுள்ளார்.

மக்கள் இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் இனி நடக்க இருக்கும் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகளை மீண்டும் கொண்டுவர தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாட்டீல்,“மாநிலத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கவும் தேவைப்பட்டால் திருத்தவும் அங்கீகாரம் அளித்துள்ளோம். ஏனெனில் மக்களின் நம்பகத்தன்மையை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிதைத்துவிட்டன,” என்றார்.

உள்ளாட்சித் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம்தான் நடத்தும். அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர கர்நாடக அரசு முயன்று வருகிறது.

அந்தத் தேர்தல் நடைபெறும்போது அமைச்சரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அது எண்ணியுள்ளது. இருப்பினும், அதுகுறித்த முடிவை மாநிலத் தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் வாக்குத் திருட்டு நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

அந்தக் குற்றச்சாட்டு மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் வாக்குச்சீட்டு நடைமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்களை நடத்தினால் வாக்குகளை எண்ணி முடிவு அறிவிக்கத் தேவைப்படும் மனிதவளமும் செலவும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்