பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
மாநில 2026-27 நிதி ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சிறுவர்கள் கைப்பேசியைப் பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில், அவர்களிடம் எதிர்மறைத் தாக்கம் ஏற்படாமல் தடுக்க சமூக ஊடகத் தடை கொண்டு வரப்பட இருப்பதாக சித்தராமையா தமது உரையில் குறிப்பிட்டார்.
கைப்பேசிக்கும் சமூக ஊடகங்களுக்கும் பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட சிறார்கள் அடிமையாவதைத் தடுக்கவும் அவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா குறிப்பிட்டார்.
முன்னதாக, பெங்களூருவில் நடந்த பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கூட்டத்தில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தடையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
‘புத்தகத்தை ஏந்து, கைப்பேசியைக் கைவிடு’ என்ற பெயரில் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பிரசாரத்தை கர்நாடக அரசு முன்னெடுத்துள்ளது.
இந்தியாவில் சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதிக்கும் முதல் மாநிலமாக கர்நாடகா உருவெடுத்துள்ளது. இதனை இதர மாநிலங்களும் பின்பற்றுமா அல்லது மத்திய அரசே இதுபற்றி பரிசீலிக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே உலக நாடுகளில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்றவை சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ள வேளையில், இந்தியாவில் தற்போது அது எதிரொலிக்கத் தொடங்கி உள்ளதாக சமூகப் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

