இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளன.
இது இதயப் பிரச்சினை, அதையொட்டிய சிக்கல்கள் குறித்து இளையர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநில முதல்வர் சித்தராமையா அதைப் பற்றி விசாரணை மேற்கொள்ள நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருக்கிறார்.
இது கொவிட்-19 கொள்ளைநோய், அதற்கெதிரான நோய்த் தடுப்பு மருந்து ஆகியவற்றின் பக்கவிளைவுகள் தொடர்புடையது என்று கருதப்படுகிறது.
இதனால், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இந்தப் பிரச்சினை பற்றி ஆய்வு செய்து திடீர் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அறிக்கையில் மரணங்களுக்கான காரணங்களுடன் பரிந்துரைகளையும் கூறுமாறு அவர் குழுவை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து தமது கவலையை எழுப்பிய செய்தியாளர் ராஜாராம் தல்லூர், இளையர்களிடையே காணப்படும் திடீர் மரணங்கள் பல குடும்பங்களில் சமூக, பொருளியல் சிரமங்களை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறினார்.
“இவை கொவிட் கொள்ளைநோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்து தொடர்புடையது என பொது வெளியில் நீண்டநாட்களாக விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே, இதை அரசாங்கம் கவனத்தில் கொண்டு, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று தல்லூர் கூறுகிறார்.
இந்தப் பிரச்சினையின் போக்கு, அது குறித்த அபாய அம்சங்கள், ஆகியவற்றை ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு நிபுணர் குழுவை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், குழுவின் செயல்பாட்டை கண்காணித்து காலக்கிரமத்துடன் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அவர் தலைமைச் செயலாளரை பணித்துள்ளார்.