தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடகாவில் டெங்கியைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்டது

2 mins read
e3608811-232f-4176-9bd7-c31c32befbed
கர்நாடகா மாநிலத்தின் பல இடங்களில் டெங்கிக் கொசுவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

பெங்களூரு: தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இதுவரை இல்லாத வகையில் டெங்கிக் காய்ச்சலால் ஏறக்குறைய 25 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 5 ஆயிரம் பேருக்கு பாதிப்பு அதிகம். இதையடுத்து, கர்நாடக அரசு டெங்கி பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் டெங்கிக் காய்ச்சலைத் தொற்றுநோயாக அறிவித்துள்ளது. மேலும் டெங்கி பெருகாமல் தடுப்பதற்குக் கடும் நடவடிக்கைகளை அது முடுக்கி விட்டுள்ளது. அவ்வகையில், வீடுகளிலும் வீடுகளைச் சுற்றிலும் சுகாதாரம் பேணாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் தொற்றுநோய்த் தடுப்புச் சட்டம் திருத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் டெங்கிக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 25,589 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த மாநிலத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2024 ஜூலை 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையிலான ஒரு மாதக் காலகட்டத்தில் மட்டும் புதிதாக 19,300 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் கடைசி 45 நாள்களில் மட்டும் 15,000 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இது 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம். கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலும் டெங்கிப் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

எனவே, வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் சுகாதாரம் பேணாதவர்களுக்கும் அசுத்தம் ஏற்படுத்துபவர்களுக்கும் ரூ. 200 முதல் ரூ.400 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.1,000 வரையிலான அபராதம் விதிக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், ஓய்வு விடுதிகள், கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், தண்ணீர்ப் புழக்கமுள்ள கடைகள், தாவரங்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை தங்கள் வர்த்தகப் பகுதியில் கொசுப் பெருக்கத்தை உண்டுபண்ணும் வகையில் இடத்தை அசுத்தமாக வைத்திருந்தால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இதையடுத்து தமிழ் நாட்டிலும் டெங்கிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், டெங்கிக் கொசுக்களைத் துடைத்தொழிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்