கர்நாடகாவில் வீடு வாங்க வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்

கர்நாடகாவில் வீடு வாங்க வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்

1 mins read
e7fb3410-27fc-44b4-93fc-87216413c1e3
பெங்களூரு நகரம். - படம்: டிஎச் ஃபோட்டோ

பெங்களூரு: ஏழை மக்களுக்கான வீட்டு வசதி நிதியை உருவாக்குவதற்காகப் புதிய தீர்வைகளை அறிமுகப்படுத்துவது குறித்துக் கர்நாடக அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

இரண்டாவது வீட்டை வாங்குவோர்க்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் கூடுதல் முத்திரை வரி, காலி மனைகளுக்குக் கட்டணம், வளர்ச்சித் திட்டங்களுக்குச் சிறப்புக் கட்டணம் முதலியவற்றை விதிப்பது குறித்து அது பரிசீலிக்கிறது.

அதன் தொடர்பில் முதல் சிறப்புக் கூட்டம் இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. அதில் துறையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினர் பங்கெடுத்தனர். மகாரா‌‌ஷ்டிர மாநிலத்தின் நிவாரா நிதி, தமிழ்நாட்டின் வீட்டுவசதி நிதி முதலியவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று கர்நாடக அரசு கருதுகிறது.

‘கர்நாடக மலிவு விலை வீடமைப்பு நிதி’ என்பது புதிய திட்டத்தின் பெயர். ஏழைகளுக்கும் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கும் உதவுவது திட்டத்தின் நோக்கம்.

அதுகுறித்த பரிந்துரை 2024-25 வரவுசெலவுத் திட்டத்தின்போது முதன்முதலில் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கத்தின் ராஜீவ் காந்தி வீடமைப்பு நிறுவனம் தெரிவித்தது.

“இதற்கான பரிந்துரையின் இறுதிவடிவை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கு முன்னர், சில கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அவற்றில் முதலாவது இது,” என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பர‌ஷுராமா ‌ஷின்னால்கர் தெரிவித்தார்.

வருவாய்க்கான வழிகள் குறித்த ஆய்வு ஆரம்பநிலையில் இருப்பதாகக் கூறிய அவர், இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும் என்றார். கடந்த பத்தாண்டில் கட்டுமானச் செலவு இருமடங்காகி உள்ளது. ஆனால் வருமானத்தில் அத்தகைய வளர்ச்சியைக் காணமுடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்