பெங்களூரு: எதிர்காலத்தில் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில் பெங்களூரு கிரிக்கெட் விளையாட்டரங்கை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதன்முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வென்றதை அடுத்து, பெங்களூரு எம். சின்னசாமி அரங்கில் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் மாண்டுபோயினர்; பலர் காயமடைந்தனர்.
“அத்தகைய விரும்பத்தகாத சம்பவம் எப்போதும் நிகழக்கூடாது. தனிப்பட்ட அளவில், அது என்னையும் கர்நாடக அரசையும் பாதித்துள்ளது,” என்று திரு சித்தராமையா கூறியுள்ளார்.
இதனையடுத்து, நீண்டகாலத் தீர்வுகளின் ஒரு பகுதியாக சின்னசாமி கிரிக்கெட் விளையாட்டரங்கைப் புதிய இடத்திற்கு மாற்றுவது குறித்து தமது அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, உயிரிழப்பை ஏற்படுத்திய கூட்ட நெரிசலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து திரு சித்தராமையா விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான பாரதிய ஜனதாவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் வலியுறுத்தியுள்ளன.
அதற்குப் பதிலளித்த முதல்வர், “கும்ப மேளாவின்போது பலர் இறந்ததற்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதல்வர் பதவி விலகினாரா? பாஜகவும் ஜனதா தளமும் அப்போது அவரைப் பதவி விலக வற்புறுத்தினவா?” என்றார்.
முன்னதாக, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என்று திரு சித்தராமையா சனிக்கிழமை (ஜூன் 7) அறிவித்தார். முன்னர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

