ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பெங்களூரு விளையாட்டரங்கில் நடத்த கர்நாடக அரசு அனுமதி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பெங்களூரு விளையாட்டரங்கில் நடத்த கர்நாடக அரசு அனுமதி

1 mins read
20131071-1278-4502-8383-93d298a4525d
சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றியாளர் பட்டம் வென்றது. - கோப்புப்படம்: ஐஏஎன்எஸ்

பெங்களூரு: இவ்வாண்டுக்கான இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளை பெங்களூரு எம்.சின்னசாமி விளையாட்டரங்கில் நடத்த கர்நாடக அரசு திங்கட்கிழமை (மார்ச் 16) ஒப்புதல் வழங்கியது.

மார்ச் 28ஆம் தேதி ஐபிஎல் டி20 போட்டிகள் தொடங்கவுள்ளன.

அன்றைய தினம் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு வெற்றியாளரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.

அவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியானது இரவு 7.30 மணிக்கு பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

முன்னதாக, சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றியாளர் பட்டம் வென்றது. அதனைத் தொடர்ந்து நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

அச்சம்பவத்திற்குப் பிறகு பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கம் போட்டிகளை நடத்த தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அந்த விளையாட்டரங்கில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியும் இறுதிப்போட்டியும் பெங்களூரு அரங்கில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்