தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடகாவில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு கன்னடத்தில் அடையாளக் குறியீடு வேண்டும்

1 mins read
கன்னட ராஜ்யோத்சவா விழாவில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தகவல்
84485554-75be-4afa-9656-6c0ad63f5dd7
கன்னடம் அல்லாத மொழிகளைப் பேசுவோர், கன்னட மொழியைக் கற்பது அம்மொழியின் வளர்ச்சிக்கு அவசியம் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறினார். - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் கன்னட மொழியில் அடையாளக் குறியீட்டைக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய கர்நாடக அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று நவம்பர் 1ஆம் தேதி கன்னட ராஜ்யோத்சவா விழாவில் கலந்துகொண்டபோது சித்தராமையா தெரிவித்தார்.

“கர்நாடகாவின் தனியார், அரசாங்கப் பிரிவுகளில் தற்போது உற்பத்தியாகும் சரக்குகளும் பொருள்களும் ஆங்கில மொழியில் மட்டுமே அடையாளக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. இனி, பொருள்களின் பெயர் கன்னட மொழியிலும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கியே நம் முயற்சிகள் அமைந்திடும்,” என்று காங்கிரஸ் முதல்வர் கூறினார்.

கர்நாடகாவில் ஒரு கன்னடச் சூழலை உருவாக்கி, மக்கள் அம்மொழியைக் கற்று தினசரி வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அதுவே மொழிக்கு செய்யக்கூடிய மரியாதை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கன்னடம் அல்லாத மொழிகளைப் பேசுவோர், கன்னட மொழியைக் கற்பது அம்மொழியின் வளர்ச்சிக்கு அவசியம் என்று கூறினார் அவர். மனிதர்களுக்கிடையே அன்பு இருப்பது அவசியம் என்பதுபோல் மொழி, கலாசாரத்தின் மீதும் அன்பு இருத்தல் வேண்டும் என்றார் சித்தராமையா.

வருடாந்தர ராஜ்யோத்சவா விருதளிப்பு நிகழ்வில் 69 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

அதே நிகழ்வில், பழைய மைசூர் மாவட்ட ஆணையரின் அலுவலகத்தில் கன்னட அரும்பொருளகம் ஒன்றை அமைப்பது குறித்தும் சித்தராமையா அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்