பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தருவதாகக் கூறி ரூ.2 கோடி ஏமாற்றியதாக கோபால் ஜோஷி என்பவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பீஜாப்பூர் மாவட்டம் நாக்தான் தொகுதியின் மஜத முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேவானந்த் ஃபுல்சிங் சவான். இவரது மனைவி சுனிதா சவான் (48), கடந்த வியாழக்கிழமை பெங்களூருவில் உள்ள பசவேஸ்வரா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோபால் ஜோஷிக்கும் அவருடைய சகோதரி விஜயலட்சுமி ஜோஷி, அவரது மகன் அஜய் ஜோஷி ஆகியோருக்கு மொத்தம் ரூ.175 கோடி கொடுத்துள்ளார் சுனிதா சவான்.
தேர்தலில் வாய்ப்புக் கிடைக்காததை அடுத்து பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு கொன்று விடுவதாக கோபால் மிரட்டுவதாக அவர் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின்பேரில் பசவேஸ்வரா நகர் காவல்துறை கோபால் ஜோஷி, அஜய் ஜோஷி, விஜயலட்சுமி ஜோஷி ஆகிய மூவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.
இதையடுத்து பெங்களூரு காவல்துறை மகாராஷ்டிர காவல்துறையின் உதவியுடன் கோபால் ஜோஷியை சனிக்கிழமை கோலாப்பூரில் கைது செய்தது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அஜய் ஜோஷியை புனேவில் கைது செய்தனர்.
சனிக்கிழமை மதியம் கோபால் ஜோஷி ஹுப்பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு கேஷ்வாபூரில் உள்ள மயூரி எஸ்டேட்டில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சோதனை மேற்கொண்ட பிறகு காவல்துறை அதிகாரிகள் அவரை கேஷ்வாபூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இது தவிர விஜயலட்சுமி, அவரது நண்பர் சோமசேகர் நாயக் ஆகிய 2 பேரையும் ஹுப்ளி பள்ளியில் கைது செய்தனர்.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, 32, ஆண்டுகளாக என் சகோதரர் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை இல்லை. அத்துடன் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதுபோல் எனக்குச் சகோதரிகள் யாரும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.

