வெளிநாட்டுச் தங்கச் சுரங்கத்தில் கர்நாடக அமைச்சருக்கு 40% பங்கு: அமலாக்கத்துறை

வெளிநாட்டுச் தங்கச் சுரங்கத்தில் கர்நாடக அமைச்சருக்கு 40% பங்கு: அமலாக்கத்துறை

1 mins read
a2e089bc-2cf1-461d-b5db-ea239ef79911
வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்து அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (FEMA) மீறியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், இச்சோதனை நடத்தப்பட்டது. - படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
multi-img1 of 2

பெங்களூரு: கர்நாடக மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், வெளிநாட்டுத் தங்கச் சுரங்க நிறுவனங்களில் 40 விழுக்காட்டு பங்குகளில் அக்குடும்பத்தார் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்து அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (FEMA) மீறியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், இச்சோதனை நடத்தப்பட்டது.

கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் பெங்களூரு, பெலகாவி, கோகாக், கோல்கத்தா உட்பட அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, அவரது மகளும் எம்பியுமான பிரியங்கா ஜார்கிஹோளி, மைத்துனர் மஞ்சுநாத் ஆகியோருக்குத் தொடர்புடைய 21 இடங்களில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அச்சோதனையின்போது, காங்கோ நாட்டின் ‘மெஸ்ஸர்ஸ் எல்டோராடோ மைனிங் ரிசோர்சஸ்’, ஜாம்பியா நாட்டின் ‘மெஸ்ஸர்ஸ் நவா ஆரம் மைனிங் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்களில் 40 விழுக்காடு பங்குகள் வைத்திருப்பதும் அங்கீகரிக்கப்படாத வழிகளில் பெருந்தொகை ரொக்கமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதும் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சாடியுள்ளது.

இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, “ஆப்பிரிக்க நிறுவனங்களில் பங்குகள் இருப்பதாகக் கூறும் அமலாக்கத்துறை, அதற்குரிய தகுந்த ஆதாரங்களை வெளியிட்டு அதனை நிரூபிக்க வேண்டும். முறைப்படி அழைப்பாணை அனுப்பினால் நேரில் முன்னிலையாகி உரிய விளக்கமளிக்கத் தயார்,” எனச் சவால் விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்