பதவியேற்ற 2 நாள்களில் கர்நாடகா அமைச்சர் பதவி விலகல்

பதவியேற்ற 2 நாள்களில் கர்நாடகா அமைச்சர் பதவி விலகல்

1 mins read
41695815-34b9-46af-9a38-796c35212b91
கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் (இடது) முதல்வர் டி.கே.சிவகுமார். - படம்: இந்து தமிழ் திசை

பெங்களூரு: அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த அதிருப்தி காரணமாகப் பதவியேற்ற இரண்டு நாள்களில் கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்வர் டி.கே.சிவகுமார் ஈடுபட்டுள்ளார்.

கர்நாடகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் கடந்த புதன்கிழமை அந்த மாநிலத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. அவரது தலைமையில் 13 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இதையடுத்து, அமைச்சர்களுக்கான இலாகாக்களை முதல்வர் டி.கே. சிவக்குமார் வியாழக்கிழமை (ஜூன் 4)அறிவித்தார்.

இதில், அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு நீர்ப்பாசனத்துறை ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வராகப் பதவியேற்பதற்கு முன் டி.கே.சிவகுமார் எனது வீட்டுக்கு வந்தார். பெங்களூரு மேம்பாட்டு இலாகாவை வழங்குவதாக அவர் உறுதி அளித்தார். இருப்பினும், நான் அவரிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. ஆனாலும் அவர் எனக்கு அந்த வாக்குறுதியை அளித்தார். நானும் அதை ஏற்பதாகக் கூறினேன்.

ஆனால், தற்போது வேறு இலாகாவை அவர் ஒதுக்கியுள்ளார். எனவே, நான் அமைச்சரவையில் நீடிக்க விரும்பவில்லை. ஒருவேளை அவர் எனக்கு பெங்களூரு மேம்பாட்டு இலாகா ஒதுக்குவதாகக் கூறினாலும் இனி நான் ஏற்க மாட்டேன். நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் உறுப்பினராகவும் நீடிப்பேன்” எனத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
கர்நாடகாஅமைச்சர்அரசியல்

தொடர்புடைய செய்திகள்