பெங்களூரு: இணைய வழி சூதாட்டம் தொடர்பான வழக்கில், கர்நாடக எம்எல்ஏ கே.சி.வீரேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) சிக்கிம் மாநிலத்தில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளின்போது ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்டவை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
50 வயதான கே.சி.வீரேந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவருக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில், வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 22) அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரொக்கப் பணம், தங்க நகைகள் தவிர, 10 கிலோ வெள்ளிப் பொருள்கள், நான்கு வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. மேலும், வங்கிக் கணக்குகள், இரண்டு வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களும் முடக்கப்பட்டன.
வீரேந்திராவின் சகோதரர் ஒருவர், துபாயில் இருந்தபடி, இணைய வழி சூதாட்டத் தளங்களை இயக்கி வந்துள்ளார் என அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
சோதனை நடவடிக்கையின்போது, வீரேந்திராவின் மற்றொரு சகோதரரின் வீட்டில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கோவாவில் மட்டும் வீரேந்திராவும் அவரது சகோதரியும் ஏழு சூதாட்ட மையங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிக்கிம் மாநிலத்துக்குத் தனது தொழிலை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக அங்குள்ள சூதாட்ட மையம் ஒன்றை குத்தகைக்கு எடுக்கத் திட்டமிட்டிருந்தார் வீரேந்திரா.
தொடர்புடைய செய்திகள்
இதற்காக, அங்கு சென்றிருந்த வேளையில்தான், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமைதான், இணைய வழி சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.