மாண்டியா: பிச்சை எடுத்து வாழ்ந்துவந்த 68 வயது மூதாட்டி உயிரிழந்ததை அடுத்து, அவர் தம் வீட்டில் 30 சாக்குப்பைகளில் பணத்தை நிரப்பி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பல காலமாகப் பிச்சையெடுத்து வந்த அவர், முதுமையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த ஹூர் என்ற இந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) தமது வீட்டில் இறந்துகிடந்த நிலையில் காணப்பட்டார்.
அதனையடுத்து, அவரது வீட்டிற்குச் சென்ற உள்ளூர்வாசிகள், அங்குப் பல சாக்குப்பைகளில் பணம் இருந்ததைக் கண்டனர்.
அவர் அந்தச் சாக்குப்பைகளைத் திறந்து பணத்தை எண்ணிப் பிரிக்கும் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவியது. அதில் 10, 20, 50 ரூபாய் பணத்தாள்களும் ஆயிரக்கணக்கான நாணயங்களும் இருந்தன. பணத்தை முழுமையாக எண்ணி முடித்தபோது, மொத்தம் 840,000 ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
மூதாட்டி ஹூர், தம் சகோதரியுடன் அந்த வாடகை வீட்டில் தொடர்ந்து வசித்து வந்தார். இருவர்க்கும் திருமணமாகவில்லை. ஈராண்டுகளுக்குமுன் சகோதரி இறந்ததைத் தொடர்ந்து, அவர் தனியாகவே வாழ்ந்து வந்தார்.
மூதாட்டியின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பணம் முழுமையாக அவருடைய இரு சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் தன் பங்காக 600,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டார். இன்னொருவர் தனக்குக் கிடைத்த 240,000 ரூபாயையும் பள்ளிவாசல் ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார்.


