பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பீதர் பகுதியில் கடந்த வாரம், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பிக்கொண்டிருந்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு, 93 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒரு வங்கிக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
மங்களூரு தட்சிண கன்னடாவின் உல்லால் தாலுகா கே.சி.ரோடு கோட்டேகார் பகுதியில் கூட்டுறவு வங்கி உள்ளது. அந்த வங்கியில் வெள்ளிக்கிழமை காலை 11:30 மணிக்கு இந்த கொள்ளைச் சம்பவம் நடந்தது. அந்த நேரத்தில் ஐந்து ஊழியர்கள் மட்டுமே வங்கியில் இருந்தனர். வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை.
ஒரு வாகனத்தில் இருந்து இறங்கிய ஐந்து முகமூடிக்காரர்கள் வங்கிக்குள் கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து ஊழியர்களை மிரட்டி, வங்கியின் பெட்டகத்தில் இருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள தங்கம், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
கொள்ளையர்கள் சென்ற கார், மங்களூரை நோக்கிச் சென்றதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
மேலும், இது தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகளில் கிடைத்த காட்சிகளின் அடிப்படையில் காவல்துறை அந்த முகமூடிக் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
கர்நாடகா வங்கிகளில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.