பெங்களூர்: கர்நாடகாவில் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான சட்ட முன்வரைவு (மசோதா), பாஜகவினரின் கடும் எதிர்ப்புக்கிடையே காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறுப்புப் பேச்சுகளைப் பேசும் குற்றவாளிகள் கூடிய பட்சம் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க இந்தப் புதிய சட்டம் வழிவகுக்கும்.
வெறுப்புப் பேச்சுக்களை தடை செய்யும் சட்ட முன்வரைவு 2025ஐ, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கடந்த, 10ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் இந்தச் சட்ட முன்வரைவை விளக்கிப் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, “அண்மைக் காலங்களில், சமூகத்தைப் புண்படுத்தும் கருத்துகளைப் பலரும் தெரிவித்து வரும் போக்கு அதிகரித்து வருகிறது. இவற்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியாது,” என்று கொலைகள், தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் சமூகப் பதற்றங்களைக் குறிப்பிட்டு அவர் கூறினார்.
மேலும், “வெறுப்பு என்பது மதம், சாதி மற்றும் பாலினம் அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து உருவாகிறது. எனவே அதைத் தடுக்க வேண்டியது அவசியம். புறக்கணிப்பும் பாகுபாடும் வெறும் வார்த்தைகள் அல்ல.
“பேச்சுகள், புத்தகங்கள் அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் வெறுப்பைப் பரப்பும் தனிமனிதர்கள் அல்லது அமைப்புகள் மீது இந்தச் சட்டம் பாயும்,” என்றார்.
வியாழக்கிழமை (18.12.2025) நடந்த விவாதத்தின்போது அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சட்டத்தின் மூலம் காங்கிரஸ் அரசு, பாஜகவினரையும் இந்துத்துவ அமைப்பினரையும் ஒடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
பா.ஜ.க,வின் கடும் எதிர்ப்பையும் மீறி மசோதா மீது சட்டசபையில் வியாழக்கிழமை விவாதம் நடந்தது. பாஜகவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது. அப்போது, பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள், அவையின் நடுப் பகுதியில் குவிந்து, வெறுப்புப் பேச்சுத் தடைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அதையும் மீறி இந்தச் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டதாகப் பேரவைத்தலைவர் யு.டி.காதர் அறிவித்தார்.
உடுப்பி, மங்களூரு, கார்வார் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மதம், மொழி, சாதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வெறுப்புப் பேச்சு காரணமாக, அவ்வப்போது கலவரங்கள் வெடித்தன. இதனால் கர்நாடக அரசு வெறுப்புப் பேச்சுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர முடிவெடுத்தது. அதன்படி வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தடுப்புச் சட்ட முன்வரைவுக்கு கடந்த 4ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், மதம், சாதி, மொழி, இனம், பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கு எதிராகச் செய்யப்படும் வெறுப்புரை கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய குற்றங்கள் பிணையில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும் எனக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

