பெங்களூரு: ஏவலாளாகப் (பியூன்) பணிபுரியும் 23 வயது ஆடவர் ஒருவர் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 99.7% மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஆனால், அவருக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வளவு அதிகமான மதிப்பெண் பெற்றதால் பிரபு லட்சுமிகாந்த் லோக்கரே என்ற அந்த ஆடவருக்கு இந்தியாவின் கர்நாடக மாநிலம், கோப்பல் மாவட்ட நீதிமன்றத்தில் ஏவலாள் வேலை கிடைத்தது.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிரபுக்கு அவ்வேலை கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அதற்கான இறுதித் தகுதிப் பட்டியல் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில், எழுதவும் படிக்கவும் லோக்கரே மிகவும் தடுமாறியதால் நீதிபதி அவர்மீது ஐயம் கொண்டார். அத்துடன், லோக்கரேவின் கல்வித் தேர்ச்சி தொடர்பில் காவல்துறையிடம் அவர் ஒரு புகாரும் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, காவல்துறை லோக்கரேமீது வழக்கு பதிந்தது.
ஏழாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள லோக்கரே தனித்தேர்வராக பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதி, 625க்கு 623 மதிப்பெண்கள் பெற்றதாக முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு உயர்ந்த தேர்ச்சி பெற்றிருப்பினும், லோக்கரேவால் கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழிகளிலும் எழுதவும் வாசிக்கவும் தெரியாததால், அவரது கல்விச் சான்றிதழ் குறித்து ஐயம் எழுந்துள்ளது.