பெங்களுர்: கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மாநில கடலோர மாவட்டங்கள், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு ஆகியவற்றில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பல இடங்களில் நிலச்சரிவு, மரங்கள் சாய்ந்து விழுவது போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் வீடு இடிந்து விழுந்த, மரம் சாய்ந்து விழுந்த சம்பவங்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவற்றுடன், வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழையில் சிக்கி ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன, மின்கம்பங்களும் மரங்களும் சாய்ந்து விழுந்தன.
உடுப்பி, உத்தரகன்னடாவின் பல இடங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடகு மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. காவிரி நதியின் மூலமான தலைக்காவிரியில் கனமழை கொட்டுகிறது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மடிகேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஹாவேரியில் புதன்கிழமை இருவர் உயிரிழந்தனர்.
இதேபோல், ஹனகல் தாலுகா குடலா கிராமத்தில் சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். சிக்பள்ளாப்பூரில் கங்கலாபுரா கிராமத்திலும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையும் சேர்த்தால் கர்நாடக மாநிலத்தில் மழைக்கு மரணமடைந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதற்கிடையே மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் சித்தராமையா “கர்நாடகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும்படி மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.