பெங்களூரு: தேங்காய் உற்பத்தியில் கேரள மாநிலத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது கர்நாடக மாநிலம்.
தமிழ்நாடு இப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல், தேங்காய் உற்பத்தியில் கேரளா முதல் இடத்தில் இருந்தது என்றும் கடந்த 2022-23ஆம் ஆண்டில் அம்மாநிலம் 563 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகா 30 கோடி தேங்காய்களை அதிகமாக உற்பத்தி செய்து, 595 கோடி தேங்காயுடன் முதல் இடத்தைப் பிடித்தது.
கடந்த 2023-24ஆம் ஆண்டிலும் உத்தேச மதிப்பீடுகளின்படி, கர்நாடகா 726 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது.
578 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து இரண்டாம் இடத்தில் தமிழகமும் 564 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து மூன்றாம் இடத்தில் கேரளா பின்தங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

