தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காப்பி, தேநீர் விற்பனையை நிறுத்தி கர்நாடக வணிகர்கள் போராட்டம்

2 mins read
8b27aa5d-82b8-49a8-a4cc-d93b17434a60
பேக்கரிகளில் புதன்கிழமை ஒருநாள் மட்டும் பால், தேநீர், காப்பி விற்பனை நிறுத்தப்பட்டது. - படங்கள்: இந்திய ஊடகம்

பெங்களூரு: வணிக வரித்துறையினர் வரி அறிவிப்புக் கடிதங்களை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிறுவணிகர்களும் உள்ளூர்க் கடைக்காரர்களும் இரண்டு நாள் போராட்டத்தை புதன்கிழமை (ஜூலை 23) தொடங்கினர்.

அதற்கு அடையாளமாக, அங்குள்ள பேக்கரிகளில் புதன்கிழமை ஒருநாள் மட்டும் பால், தேநீர், காப்பி விற்பனை நிறுத்தப்பட்டது.

சிறுவணிகர்களின் இந்தப் போராட்டம், வணிக வரித்துறையின் நடவடிக்கை நியாயமற்றது என்பதைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.

மாநிலம் முழுவதுமுள்ள சிறுவணிகர்கள் கறுப்புப் பட்டை அணிந்து இந்த ஒருநாள் அடையாளப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

வரி தொடர்பில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்புக் கடிதங்களை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சிறுவணிகர்கள் தொழில்புரிவதற்கான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காவிடில் போராட்டம் தீவிரமடையும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய கர்நாடக சாலை வணிகர்கள் சங்க உறுப்பினரான அபிலாஷ் ஷெட்டி, “ஐந்து முதல் பத்து விழுக்காடு லாபம் வைத்து சிறுவணிகர்கள் செயல்படுகின்றனர். பொருள், சேவை வரியுடன் (ஜிஎஸ்டி) அபராதம் போன்றவற்றைச் சேர்த்து 50 விழுக்காடு செலுத்தச் சொல்கின்றனர். அவ்வளவு தொகையை எங்களால் செலுத்த முடியாது. அரசாங்கம் இதில் தலையிட்டு, சிறுவணிகர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்,” என்றார்.

தொழில் தொடங்க பதிவுசெய்யும்போதே வரிக் கடப்பாடுகள் குறித்து சிறுவணிகர்களுக்குக் கற்பிக்க அரசாங்கம் தவறிவிட்டது என்று அச்சங்கத்தின் வழக்கறிஞர் சகுந்தலா குறைகூறினார்.

இதனிடையே, ரூ.2.9 மில்லியன் வரி செலுத்தச் சொல்லி ஹவேரி பகுதியைச் சேர்ந்த சங்கர் கௌடா என்ற காய்கறி வணிகருக்கு பெங்களூரு வரி அலுவலகத்திலிருந்து அறிவிப்புக் கடிதம் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

“பழங்கள், காய்கறிகளுக்கு ஜிஎஸ்டி விதிகள் இல்லாததால் ஜிஎஸ்டி எண்ணை நான் பதிவுசெய்யவில்லை. இந்நிலையில், ரூ.4 மில்லியன் வணிகத்திற்காக ரூ.2.9 மில்லியன் வரிசெலுத்தச் சொல்லி கடிதம் வந்துள்ளது. அவ்வளவு தொகைக்கு நான் காய்கறி விற்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் கடிதத்தை மீட்டுக்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்,” என்று திரு சங்கர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்