அழகுமுகம் அலங்கோலமானது; திருமணமும் நின்றுபோனது

1 mins read
4146c61e-04a9-44a8-b228-7fed1a64cb30
இப்படி இருந்த பெண்ணின் முகம், இப்படியாகிப் போனது. படங்கள்: இந்திய ஊடகம் -

பெங்களூரு: திருமணத்திற்கு ஒரு சில நாள்களே இருந்த நிலையில், தன்னை அழகுபடுத்திக்கொள்வதற்காக அழகு நிலையம் சென்ற மணப்பெண்ணின் முகம் கறுப்பாகி, கொப்புளங்கள் வந்து, வீங்கிப் போனதைக்கண்டு மணமகன் அதிர்ச்சி அடைந்தார். அதனால், திருமணத்தையும் அவர் நிறுத்திவிட்டார்.

கர்நாடக மாநிலத்தின் அரிசிகெரேவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஆடவருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதன்பின், திருமணத்திற்குத் தயாராகும் வகையில், கடந்த வாரம் அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்துக்கு அப்பெண் சென்றார்

அப்போது, திருமணத்திற்கு வித்தியாசமாக அலங்காரம் செய்துகொள்ள விரும்பிய அப்பெண், புதிய உத்தியைப் பயன்படுத்துமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து, அழகு நிலைய உரிமையாளர் கங்கா, தான் புதிய வகையிலான 'மேக் அப்' முறையைக் கற்றுக்கொண்டுள்ளதாகவும் அதை முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு மணப்பெண்ணும் சம்மதிக்க, கங்கா அவரது முகத்தில் புதுவகை அழகுப்பூச்சுகளைப் பூசி, வெந்நீரில் ஆவிபிடிக்கச் செய்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, இளம்பெண்ணின் முகம் கறுப்பாகிப்போனது; முகம் வெந்து கொப்புளங்கள் வந்தன. கண்களும் கன்னமும் வீங்கிப்போயின. இதனால், இப்போது திருமணமும் நின்றுபோக, அந்த இளம் பெண்ணும் அவரின் குடும்பத்தினரும் செய்வதறியாது தவிக்கின்றனர்.

மணமகளின் குடும்பத்தினர் அழகுநிலைய உரிமையாளர் கங்காமீது அரிசிகெரே காவல் நிலையத்தில் புகாரளித்தனர். விசாரணை நடந்து வருகிறது.