திருவண்ணாமலை: கார்த்திகைத் திருநாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பக்தர்கள் வருகையால் களைகட்டியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை மகா தேரோட்டம் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் வைபவம் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
மாலை 6 மணிக்குக் கோயிலுக்குப் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஜோதி வடிவமான மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை நகரம் முழுவதும் களைகட்டியுள்ளது.
மகா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் ஆயிரம் மீட்டர் காடாத் துணி, மாட வீதியில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு கோயிலில் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்புப் பூசைகள் செய்யப்பட்டன.
மகா தீபத்தை தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் மற்றும் மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தீபத் திருவிழாவின்போது பக்தர்கள் மலை ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காலையில் நடைபெறும் பரணி தீபத்துக்கு 5,500 பக்தர்களும் மாலை மகா தீபத்துக்கு 8,500 பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
தீபத் திருவிழாவையொட்டி 15,500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“இந்த ஆண்டு புதிய முன்னெடுப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பொதுமக்களும் தீபத் திருவிழாவின்போது சுவாமி தரிசனம் செய்யும் வகையில் 1,500 அனுமதிச் சீட்டுகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன,” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
