புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் திங்கட்கிழமை (டிசம்பர் 29) முன்னிலையாகினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையை, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு கண்காணித்து வருகிறது.
விசாரணையின் அடுத்தகட்டமாக தவெக மாநில பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, இணைச்செயலர் நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் நேரில் முன்னிலையாகுமாறு சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருந்தது.
அதன்படி, ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் முன்னிலையாகினர்.
கூட்ட நெரிசல் சம்பவம் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர் இந்த விசாரணை திங்கட்கிழமஇ முழுவதும் நடைபெறும் என சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

