தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரூர் விஜய் பிரசார கூட்டம்: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

2 mins read
81379a96-0224-4a59-be9b-8401ee5a87fd
கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக அதிகமானோர் பங்கேற்றனர். - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த சிபிஐ விசாரணையை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழு கண்காணிக்கும் என்றும், இந்தக் கண்காணிப்புக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு தெரிவித்தது.

ஆனால் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக காவல்துறை அதிகாரி தலைமையில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தவெக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (அக்டோபர் 13) இந்த உத்தரவை பிறப்பித்தது.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பு முறையீடு செய்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில், எதிர்மனுதாரராக சேர்க்கப்படாத தவெக தலைவர் விஜய் பற்றி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட கருத்துகளையும் நீக்கக் கோரி தவெக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை என்றெல்லாம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், அதனை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கில், தவெக தரப்பு வாதங்களை ஏற்று, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்புக் குழுவையும் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விவகாரமாக இதைக் கருதுவதாகவும், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை மக்களின் உரிமை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்