புதுடெல்லி: இந்தியாவின் வடக்கு, தெற்கு பகுதிகளின் சங்கமத்தை வலுவாக்கியவர் அகத்திய முனிவர் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழுரை பாடினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் நமோ படித்துறையில் மூன்றாம் ஆண்டாக நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் சனிக்கிழமை (பிப்ரவரி 15ஆம் தேதி) தொடங்கியது. அதை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
அப்பொழுது பேசிய அவர், வாரணசியில் இதற்கு ஏற்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், சங்கமத்துக்காக தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களை வரவேற்றார்.
சங்கமத்தின் கருப்பொருளாக அகத்திய முனிவர் இருப்பதாகவும், இந்தியாவின் வளமான அறிவு, மரபுகளை அவர் பிரதிபலிப்பதாகவும் கூறினார். வடக்கு, தெற்கு, சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளின் சங்கமத்தை வலுப்படுத்துவதில் அகத்திய முனிவரின் ஆழமான பங்கு உள்ளதாக அவர் விளக்கினார்.
இதில் உரையாற்றிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ் மக்கள் தங்கள் கலாசாரத்தையும் மரபுகளையும் உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் எங்கு சென்றாலும் வாழ்க்கையை வளப்படுத்துகின்றனர்,” என்றார்.
மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், “தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையிலான பழங்கால தொடர்புகளை மீண்டும் கண்டு பிடித்து உறுதிப்படுத்தி கொண்டாடுவதே காசி தமிழ்ச் சங்கமத்தின் நோக்கமாகும். தமிழ்நாட்டையும் காசியையும் இது இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரும்.
“பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி உலகம் முழுவதிலும் திருவள்ளுவருக்கு கலாசார மையங்கள் அமைத்து வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி. திருவள்ளுவர் புகழை இந்தியாவில் மட்டுமின்றி ஐநா சபை உள்ளிட்ட உலகம் முழுவதிலும் ஆற்றும் தன் உரையிலும் அவர் திருவள்ளுவர் புகழை பேசி வருகிறார்.
“பாரதியாருக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கையும் அமைத்துள்ளார்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கமம் குறித்த திரைத் தொகுப்பு காட்டப்பட்டது. தமிழகத்தின் கலைஞர்களால் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவற்றை மேடையில் இருந்தபடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
விழாவில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 41 இந்தி மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டன.
அவற்றில், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்கணக்கு, முத்தொள்ளாயிரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் களவியல் உரை, தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவை இடம்பெற்றன.