ஸ்ரீநகர்: போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீர் மக்கள் பணம் முதல் தங்கம் வரை தாராளமாக நன்கொடை வழங்கி உள்ளனர். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு ஆதரவாக, காஷ்மீரின் பட்காம், பாரமுல்லா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்கத் தொடங்கியுள்ளனர்.
ஈகைத் திருநாள் (ரம்ஜான்) கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, ஷியா பிரிவு மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருள்களைச் சேகரித்தனர்.
அப்போது மக்கள் பணமாக மட்டுமல்லாமல் தங்கம், வெள்ளி நகைகள், கால்நடைகள் மற்றும் பாரம்பரிய செப்புப் பாத்திரங்களையும் நன்கொடையாக வழங்கினர்.
ஈரான் தூதரகம் நன்றி
இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் இதுகுறித்த புகைப்படங்களையும் காணொளிகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. ஈரானை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பணம் மற்றும் நகைகளை வழங்கிய இந்தியர்களின் ‘அன்பு’ மற்றும் ‘மனிதாபிமானத்துக்கு’ அந்நாட்டு தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் தூதரகத்தின் எக்ஸ் பக்கத்தில், ‘‘நன்றியால் நிறைந்த இதயங்களுடன், காஷ்மீரின் அன்பான மக்கள் தங்களின் மனிதாபிமான ஆதரவு, மனப்பூர்வமான ஒற்றுமையின் மூலம் ஈரான் மக்களுடன் உறுதுணையாக நிற்பதற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அன்பு ஒருபோதும் மறக்கப்படாது. நன்றி, இந்தியா,” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றனர். பல பெண்கள் தங்களின் தனிப்பட்ட தங்க நகைகளையும் மதிப்புமிக்க வீட்டு உபயோகப் பொருள்களையும் தானமாக வழங்கினர்.
குறிப்பாக, காஷ்மீரைச் சேர்ந்த கைம்பெண் ஒருவர், மறைந்த தன் கணவரின் நினைவாக 28 ஆண்டுகளாகப் பாதுகாத்து வந்த தங்க நினைவுப் பதக்கத்தை ஈரான் மக்களுக்காக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், “காஷ்மீரைச் சேர்ந்த ஒரு சகோதரி, 28 ஆண்டுகளுக்கு முன்பு காலமான தனது கணவரின் நினைவாக வைத்திருந்த தங்கப் பதக்கத்தை ஈரான் மக்கள் மீதான அன்பு மற்றும் ஒற்றுமைக்காக வழங்கியுள்ளார். உங்களின் கண்ணீரும் தூய உணர்வும் ஈரான் மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாகும்,’’ என கூறியுள்ளது.

