கேதார்நாத், பத்​ரி​நாத் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு

கேதார்நாத், பத்​ரி​நாத் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு

2 mins read
c2a89cf4-7672-4fae-bb1d-39fd353ce24f
கேதார்​நாத், பத்​ரி​நாத் கோயில்​களில் நடந்​த நிதி முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. - படங்கள்: இந்து தமிழ்

புதுடெல்லி: உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் உள்ள கேதார்​நாத், பத்​ரி​நாத் கோயில்​களில் நடந்​துள்ள நிதி முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது கடுமை​யான சட்​ட​பூர்வ நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உத்​த​ராகண்ட் அரசாங்கம் உத்​தரவு பிறப்பித்துள்ளது.

கேதார்​நாத் கோயில் நிர்​வாகத்​தில் மிக முக்கிய விருந்தினர்களின் தங்குமிடம், உணவு, மற்ற செலவுகளுக்காகக் கோயி​லின் பொது நிதியி​லிருந்து முறையான ஒப்​புதல் பெறாமல் முன்​தொகை வழங்கப்பட்டுள்ளது. அது நிதி நிர்​வாகத்​தில் நடந்​துள்ள மிகப்​பெரிய விதி​மீறல் என்று முதற்​கட்ட விசா​ரணையில் தெரியவந்துள்ளது.

அதன் தொடர்பில் சுற்​றுலாத் துறை துணைச் செய​லா​ளர் அனில்குமார் பாண்டே அனுப்​பிய கடிதத்​தில், அப்போதைய கோயில் மேலா​ளர், முதன்​மைப் பொறுப்பு அதிகாரி, முதன்மைச் செயல் அதி​காரி ஆகியோர்மீது ‘ஸ்ரீபத்ரிநாத் - கேதார்​நாத் கோயில் குழுச் சட்​டம் 1939’ன்கீழ், தகுந்த நடவடிக்கை எடுக்க தற்​போதைய முதன்​மைச் செயல் அதிகாரிக்கு அரசு உத்​தர​விட்​டுள்​ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பத்​ரி​நாத் கோயி​லில் கடந்த ஜூலை 2ஆம் தேதி பக்​தர்​கள் செலுத்​திய காணிக்​கைப் பணம் எண்ணப்பட்டபோது, பெரும் திருட்டுச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்​தது.

பாது​காப்பு விதிமுறைகளை முழு​மை​யாக மீறி காணிக்கை அறையிலிருந்து பணம் வெளியே கொண்டு செல்​லப்​பட்​டது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

அதன் தொடர்பில் கோயில் பொறுப்பு அதி​காரி யுத்​வீர் புஷ்பவான் அளித்த புகாரைத் தொடர்ந்து, பத்​ரி​நாத் காவல்துறையினர் வழக்குப் ​ப​திவு செய்​தனர்.

சிறப்பு புல​னாய்​வுக் குழு அந்த வழக்கில் இது​வரை ஐந்து முக்கிய சாட்​சிகளிடம் நேரடி விசா​ரணை நடத்தி வாக்குமூலம் பெற்​றுள்​ளது. கடந்த மூன்று ஆண்​டு​கால கோயில் வங்கிக் கணக்கு விவரங்​களைக் காவல்​துறை​யிடம் ஒப்படைக்கக் கோயில் குழு முடிவு செய்​துள்​ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்