சென்னை: மலேசியாவில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க கீழடி ஆய்வாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசு விரும்பும் வகையில் கீழடி ஆய்வு முடிவுகளை எழுத மறுத்து வரும் இந்தியத் தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணா, டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. அது கண்டனத்துக்கு உரியது.
“வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட அனுமதிக்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டுமெனில் இந்திய அரசின் செயல்பாடு, கொள்கைகள் அல்லது நற்பெயரை விமர்சிக்கும் எந்த கருத்தையும் நீங்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என அமர்நாத் ராமகிருஷ்ணா கேட்டுக்கொள்ளப்பட்டார்.
“அந்த உறுதிமொழியை அவர் தர மறுத்துவிட்டதாகவும் அதனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
“மத்திய அரசின் இத்தகைய செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்திட அனைத்து ஜனநாயக சமயச் சார்பற்ற இடது சாரி சக்திகளும் ஒன்றுபட்டு செயல்பட முன்வரவேண்டும்.
“உடனடியாக, அமர்நாத் ராமகிருஷ்ணா மலேசியா செல்ல அனுமதி வழங்க வேண்டுமென மத்திய அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது,” என்று மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
