தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க புதிய வழியைக் கையாளும் கீளூர் கோக்கலாடா அரசு பள்ளி

2 mins read
fe9270e6-0130-4fb0-8faa-dbcb55d884ce
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்கும் அரசுப் பள்ளி ஆசிரியர். - படம்: ஊடகம்

மஞ்சூர்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவதை முன்னிட்டு ஒன்றாம் வகுப்பிற்கு பதிவு செய்யும் சிறுவர்களுக்கு ரூ.5,000 வைப்புத் தொகையை செலுத்தி மாணவர்களை ஈர்க்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது.

அதன்பொருட்டு மாணவர்கள் அதிகமானோர் சேரும் விதமாக அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மஞ்சூர் அருகில் உள்ள கீளூர் கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளியில் சேரும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய இருப்பதாக கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு மாணவர் சேர்க்கையில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் திட்டம் குறித்து கிராம மக்கள் கூறும்போது, “மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளி மூடப்பட்டது.

“இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களின் தொடர் முயற்சியால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இந்தப் பள்ளி திறக்கப்பட்டது.

“தற்போது இந்தப் பள்ளியில் 42 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரத்தை வைப்புத் தொகையாக போடுகிறோம்.

“அந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பை முடித்துச் செல்லும்போது முதிர்வுத் தொகையுடன் மொத்த பணத்தையும் அவர்கள் உயர் கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

“ஒன்றாம் வகுப்பு மட்டுமின்றி ஆறாம் வகுப்பு வரையும் புதிதாக சேரும் மாணவர்களின் வங்கிக் கணக்கிலும் ரூ.5 ஆயிரம் தொகை போடப்படும். 7, 8, 9, 10 என ஒவ்வொரு வகுப்பில் சேரும் மாணவர்களுக்கும் குறிப்பிட்ட தொகை வைப்புத் தொகையாக செலுத்தப்படும்,” என்றனர்.

இந்த அறிவிப்பினால் கணிசமான சிறுவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்