தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காங்கிரஸ், பாஜகவைப் புறக்கணித்த கெஜ்ரிவால்: கோவா தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி

2 mins read
bbdb3453-ca1b-4994-8dbe-685416bfa9b1
அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: ஊடகம்

பானாஜி: எதிர்வரும் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனால் தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

மேலும், அவ்விரு கட்சிகளும் மக்கள் பணத்தை தொடர்ந்து கொள்ளையடித்து வருவதாகவும் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இத்தேர்தலை கூட்டணி அமைக்காமல் தனித்து எதிர்கொள்ள ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சி அண்மையில் அறிவித்தது. எனினும், கோவை தேர்தலில் காங்கிரசும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தனித்துப் போட்டி, தனித்து ஆட்சி என்ற ஆம் ஆத்மியின் திடீர் முழக்கம் காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், வடக்கு கோவாவின் மாம் சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினார் திரு கெஜ்ரிவால். அப்போது கோவாவில் பாஜகவும் காங்கிரசும் ரகசியக் கூட்டணி வைத்துள்ளதாகவும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் அது நேரடியாக பாஜகவுக்கு 40 எம்எல்ஏக்களை வழங்குவது போலாகிவிடும் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

“பாஜக எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் கூட்டாக வணிகங்களை நடத்துகிறார்கள். இதற்கு எதிராகக் குரல் எழுப்பினால் தாக்கப்படுவீர்கள்.

“எதிர்வரும் தேர்தலில் இது மாற வேண்டும். கோவாவின் வளங்களின் மீது யாருக்கு உரிமை இருக்க வேண்டும்? மக்களுக்கா அல்லது இந்தக் குடும்பங்களுக்கா?” என்று கேள்வி எழுப்பினார் கெஜ்ரிவால்.

குறிப்புச் சொற்கள்