இரண்டு நாள்களில் பதவி விலகுவேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

2 mins read
9e4d4feb-5c66-4abe-85db-038c20254c5e
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் பதவியிலிருந்து இன்னும் இரண்டு நாள்களில் விலகவுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒருவர், முதல்வராகப் பொறுப்பேற்க இருப்பதாக டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோது கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

அடுத்த இரு நாள்களில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அப்போது புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

மதுபான ஊழல் வழக்கில் கைதாகி வெளிவந்துள்ளார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.

ஆனால், டெல்லியில் உள்ள முதல்வர் அலுவலகம் அல்லது தலைமைச் செயலகத்திற்குள் அவர் நுழையக்கூடாது என்றும் அரசு சார்ந்த ஆவணங்களில் கையெழுத்திடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதன் காரணமாக, அவர் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், “என்னைக் கைது செய்தபோதுகூட நான் பதவியைவிட்டு விலகவில்லை. காரணம், ஜனநாயகத்தை நான் மதிக்கிறேன். அரசியல் சாசனம்தான் மற்ற அனைத்தையும்விட எனக்கு மிக உச்சமானது. எனினும், அடுத்த இரு நாள்களில் நான் பதவி விலக உள்ளேன். மக்கள் உரிய தீர்ப்பை வழங்கும் வரை நான் இனி முதல்வர் இருக்கையில் அமரப்போவதில்லை.

“டெல்லியில் உள்ள ஒவ்வொரு சாலைக்கும் செல்வேன். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களைச் சந்திப்பேன்,” என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது கெஜ்ரிவால் சூளுரைத்தார்.

எப்போதும் ஆசீர்வதிக்கும் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து பிரச்சினைகளையும் ஆம் ஆத்மி கட்சியினர் கடந்து வருவதாகக் கூறினார்.

“ஆம் ஆத்மி சிறிய கட்சிதான். ஆனால், இந்நாட்டின் அரசியல் களத்தை நாம் மாற்றி அமைத்துள்ளோம். இதற்காக கடவுளுக்கு நன்றி,” என்றார் கெஜ்ரிவால்.

இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவது தியாகமன்று என்று பாஜக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, முதல்வர் நாற்காலிக்கு அருகில் செல்லக்கூடாது, எந்த அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.

“எனவே, உங்களுக்கு வேறு வழியில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் பதவி விலகும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள்.

“சிறையா பிணையா என்று நீங்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு எழுப்பிய கேள்விக்கு, மக்கள் விடை அளித்துள்ளனர். டெல்லியில் உள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்த நிலையில், சிறைக்குச் சென்றுள்ளார் கெஜ்ரிவால். ஆனால், தற்போது முதல்வர் பதவியில் இருந்து விலக, இரண்டு நாள்கள் அவகாசம் கேட்டுள்ளார். தன் மனைவியை முதல்வராக்க அவர் திட்டமிடுகிறார்,” என்று மஞ்சிந்தர் சிங் தமது பதிவில் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்