கேரளா: தேர்தல் அதிகாரிகள் 20,000 பேர் வாக்களிக்க முடியவில்லை

கேரளா: தேர்தல் அதிகாரிகள் 20,000 பேர் வாக்களிக்க முடியவில்லை

2 mins read
தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடிய உயர் நீதிமன்றம்
843ebdeb-6171-4958-b072-c42b0bc66630
கேரளச் சட்டமன்றத் தேர்தலுக்காக ஏப்ரல் 8ஆம் தேதி மாலை வாக்குப்பதிவிற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள். - கோப்புப்படம்: பிடிஐ
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலச் சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட்ட 20,000 ஊழியர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த இயலாமல் போனது.

இதன் தொடர்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கேரள உயர் நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.

“அவர்களுக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நீங்கள் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள்?” என்று நீதிபதி கே.வி. ஜெயகுமார் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு வாக்காளரும் தமது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதிசெய்வது தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதை நீதிமன்றம் நினைவூட்டியது.

ஏப்ரல் 9ஆம் தேதி கேரளத்திலுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்குத் அஞ்சல் வாக்குகள் மறுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்தும் அஞ்சல் வாக்குகள் வழங்கப்படவில்லை என்றும் தேர்தல் முடிந்த பிறகும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

ஏறக்குறைய 6,000 அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தும் வாக்குச்சீட்டுகள் கிடைக்கவில்லை என்றும் பணி நிமித்தமாக அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதால் பலரால் வாக்களிக்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதனையடுத்து, அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் தேவையான வசதிகளைச் செய்து தருவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

“தங்களால் வாக்களிக்க முடியவில்லை என்று அவர்கள் புகாரளித்தால் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வகைசெய்ய வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவுக்காக ஆணையம் காத்திருக்கக்கூடாது,” என்றும் அவர் சொன்னார்.

மேலும், அஞ்சல் வாக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்குவது குறித்தும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கேரளாசட்டமன்றத் தேர்தல் 2026வாக்குப்பதிவுஉயர் நீதிமன்றம்தேர்தல் ஆணையம்