திருவனந்தபுரம்: கடந்த 2025ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தின் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு 201 ஊழல் வழக்குகளைப் பதிவுசெய்தது.
குறிப்பாக, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு பொறி வைத்துச் செயல்பட்டதன்மூலம் வெற்றிகரமாக 57 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அந்நடவடிக்கைகளின்போது, அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 76 பேர் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு வரலாற்றில் இதற்குமுன் இத்தனை பேர் கையும் களவுமாகச் சிக்கியதில்லை. அவ்வகையில், வருவாய்த்துறை (20), உள்ளாட்சித்துறை (12), காவல்துறை (6) ஆகிய துறைகள்மீதே அதிக வழக்குகள் பதிவாயின.
ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) வெளியிட்ட தரவுகள் மூலம் இவை தெரியவந்தன.
“அரசு அலுவலகங்களில் ஊழல் நடப்பதற்கு முகவர்களும் இடைத்தரகர்களுமே முக்கியக் காரணங்களாக விளங்குகின்றனர்,” என்று ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அப்பிரிவு கடந்த ஓராண்டாகவே இடைத்தரகர்கள்மீது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது.
2025ஆம் ஆண்டில் மட்டும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு 1,152 அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டது. பொதுமக்களின் 9,193 புகார்களை அது ஆராய்ந்தது. அத்துடன், 136 ரகசியப் புலனாய்வுகளும் 300 முதற்கட்ட விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. 30 வழக்குகளில் 39 பேர் தண்டிக்கப்பட்டனர்.
கேரளாவில் 2025ஆம் ஆண்டு லஞ்சம் வாங்குவது அதிகரித்தது. இதற்குமுன் சிறிய தொகைகள் கைமாறிய நிலையில், கடந்த ஆண்டு லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் பிடிபட்டது. மொத்தம் 1,492,750 ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மூன்று சம்பவங்களில் ‘கூகல் பே’ வழியாக லஞ்சப் பணம் கைமாறியதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பொதுமக்கள் லஞ்சம் தொடர்பில் புகாரளிக்க ஏதுவாக, 24 மணி நேர நேரடித் தொலைபேசி அழைப்பு எண்ணும் வாட்ஸ்அப் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புத்தாண்டிலும் தங்களது பணியில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம் என்று ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநர் மனோஜ் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஊழல் இல்லாத கேரளா’வை உருவாக்க குடிமக்கள் புகாரளிப்பது மிக முக்கியம் என்பதால் பொதுமக்களும் தங்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

