கேரளா: 337 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

கேரளா: 337 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

1 mins read
3c02f16b-aee7-436c-8605-0d754fa9af30
கேரள மாநிலத்தில் தேர்தல் பணிக்காக 175,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். - மாதிரிப்படம்: பிடிஐ

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பிய 1,637 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன; 337 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மொத்தம் 2,125 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இறுதிப்பட்டியலில் கிட்டத்தட்ட 1,254 பேர் இடம்பெற்றிருப்பர் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் ரத்தன் கேல்கர் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 26.

தேர்தல் பணிக்காக ஏறக்குறைய 175,000 பேர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் திரு ரத்தன் கூறினார்.

கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 27,142,952 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். அவர்களில் 242,093 பேர் வெளிநாடுவாழ் வாக்காளர்கள்.

இருப்பினும், தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து நாடுதிரும்புவோரின் எண்ணிக்கை பெரிதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாடுவாழ் வாக்காளர்களில் அதிகமானோர் வளைகுடா நாடுகளில்தான் உள்ளனர்.

மத்திய கிழக்கில் இப்போது சண்டை நடந்துவருவதால் அங்கிருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. பயணச்சீட்டுகளின் விலையும் உயர்ந்துவிட்டது.

மலபார் வட்டாரத்திலுள்ள சில தொகுதிகளில் வெளிநாடுவாழ் வாக்காளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது. அதனால், கடந்த முறை மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் கைநழுவிய தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற அவர்களின் வாக்கு முக்கியம் என்று காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி கருதுகிறது.

இந்தத் தேர்தலில்தான் முதன்முறையாக ஊடகப் பணியாளர்கள் அஞ்சல்வழி வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்