கேரளா: எலிக்காய்ச்சலால் நான்கு மாதங்களில் 59 பேர் இறப்பு

கேரளா: எலிக்காய்ச்சலால் நான்கு மாதங்களில் 59 பேர் இறப்பு

1 mins read
f3f8853e-c2f3-4068-b355-a9a9a4ffb3ad
நோய்வாய்ப்பட்ட எலிகளின் சிறுநீர் மண்ணிலும் நீரிலும் கலப்பதன்மூலம் எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் லெப்டோஸ்பைரா நுண்கிருமி பரவுகிறது. - மாதிரிப்படம்

திருவனந்தபுரம்: கோடைக்காலத்திலும் ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ எனப்படும் எலிக்காய்ச்சல் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடுமையான சுகாதார நெருக்கடியாக விளங்கி வருகிறது.

அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டில் மட்டும் எலிக்காய்ச்சலால் 29 பேர் இறந்துவிட்டனர். அதுசார்ந்து மேலும் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகச் சந்தேகப்படுகிறது.

அங்கு மொத்தம் 703 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் 423 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.

பொதுவாக, பருவமழைக் காலத்தில்தான் எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும். இந்நிலையில், இப்போதைய கோடைப் பருவத்திலும் இடையிடையே மழைபெய்வதாலும் எலிக்காய்ச்சல் பரவிவருவதாகச் சொல்லப்படுகிறது.

எலிக்காய்ச்சலால் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இவ்வாண்டின் முதலிரு மாதங்களில் மட்டும் அந்நோயால் 20 பேர் மாண்டுவிட்டனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் கேரளாவில் எலிக்காய்ச்சலால் 283 பேர் உயிரிழந்துவிட்டனர். அதற்கடுத்த 2024ஆம் ஆண்டில் அதனால் 300க்கும் மேற்பட்டோர் மாண்டுபோனது கவலையை எழுப்பியது.

நீர் தேங்கியுள்ள அல்லது சுகாதாரமற்ற சூழலில் வசிப்போர் எலிக்காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

நோய்வாய்ப்பட்ட எலிகளின் சிறுநீர் மண்ணிலும் நீரிலும் கலப்பதன்மூலம் எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் லெப்டோஸ்பைரா நுண்கிருமி பரவுகிறது.

கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கண்களைச் சுற்றி சிவந்துபோதல், குமட்டல், வாந்தி உள்ளிட்டவை எலிக்காய்ச்சலுக்கான பொதுவான சில அறிகுறிகள்.

குறிப்புச் சொற்கள்