திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலச் சட்டமன்றத் தேர்தலைச் சுமுகமாக நடத்துவதற்கான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலக் காவல்துறைத் தலைவர் ராவடா ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 9ஆம் தேதி வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கிறது.
மாநிலம் முழுவதும் சிறப்புப் பாதுகாப்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மூத்த அதிகாரிகளின் தலைமையில் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மாநிலத்திலுள்ள காவல் நிலையங்கள் 154 தேர்தல் துணைப் பிரிவுகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல்துறைத் தலைவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதுமுள்ள 30,471 வாக்குச்சாவடிகளுக்குப் பாதுகாப்பு வழங்க 28,209 சிறப்புக் காவல்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 76,203 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவற்றில் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ள 2,500 முக்கிய வாக்குச்சாவடிகளும் அடங்கும்.
உள்ளூர்க் காவல்துறையினருடன் சேர்த்து, சிறப்புப் பிரிவுகள், படைப்பிரிவுகள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தோரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, 140 மத்தியப் பாதுகாப்புப் படைப் பிரிவுகளும், தமிழகக் காவல்துறையின் 20 பிரிவுகளும் கேரளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் சுமுகமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய அனைத்து ஆயத்தப் பணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கேரளக் காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, தேர்தலை ஒட்டிய காவல், பாதுகாப்புப் பணிகளுக்காகக் கேரள அரசு ரூ.42.89 கோடியை ஒதுக்கியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) மாலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது.
தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், பிரசார ஓய்வு நாளான புதன்கிழமையும் தேர்தல் நாளான வியாழக்கிழமையும் தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும்.

