மூணாறு: கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அந்த மாவட்டத்தில், கடந்த நான்கு நாள்களாக ‘வைரஸ்’ காய்ச்சல், டெங்கி, எலிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதுவரை 978 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, மழைக்காலங்களில் பரவும் தொற்றுநோய்களைத் தடுக்கச் சுகாதாரத்துறை வழங்கும் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 5) இடுக்கி தாலுகாவில் 39.2 மில்லிமீட்டர், பீர்மேடு தாலுகாவில் 60 மில்லிமீட்டர், தொடுபுழா தாலுகாவில் 35.8 மில்லிமீட்டர், தேவிகுளம் தாலுகாவில் 31 மில்லிமீட்டர் மற்றும் உடும்பஞ்சோலை தாலுகாவில் 25 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
மேலும், சனிக்கிழமையும் கனமழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் நாள்களிலும் பருவமழை தீவிரமாக இருக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

