அரசுத் தரவுகளைத் தனியாருக்கு விற்கும் கொள்கைக்குக் கேரளா ஒப்புதல்

அரசுத் தரவுகளைத் தனியாருக்கு விற்கும் கொள்கைக்குக் கேரளா ஒப்புதல்

படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

17 Oct 2026 - 5:36 pm

2 mins read

திருவனந்தபுரம்: கேரள அமைச்சரவை 2026ஆம் ஆண்டுக்கான புதிய தரவுக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரசிடம் உள்ள பல்வேறு தகவல்களைத் தனியார் நிறுவனங்களுக்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கும் வணிக அடிப்படையில் விற்பனை செய்வதே அந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

இதன்மூலம் அரசுத் தரவுகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதோடு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில்துறை பெருக்கம், பொருளியல் நடவடிக்கைகளை ஆதரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ், அரசுத் துறைகளிடம் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகள், அவற்றின் வணிக மதிப்பு, பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் வெளிப்படுத்துவதற்கான தகுதி ஆகியவை மதிப்பிடப்பட்ட பிறகு, தகுதியான நிறுவனங்களுடன் பகிரப்படும்.

அந்தத் தரவுகளை அணுகுவதற்குத் புதிய தொடக்க நிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

எந்தத் தகவல்களைத் தனியார் நிறுவனங்களுடன் பகிரலாம் என்பதையும், கட்டண விவரங்களையும் தலைமைச் செயலாளர் தலைமையிலான தரவு ஆணையக் குழு கண்காணித்துத் தீர்மானிக்கும்.

தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் ரகசியத் தகவல்களும் தனிநபர் விவரங்களும் பகிரப்படுவதில் இருந்து விலக்கப்படும். அடையாளத்தைக் கண்டறியக்கூடிய விவரங்கள் தரவுத்தொகுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட பின்னரே நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

இந்த விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை, தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் பொதுச் சேவைகளை மேம்படுத்தவும் அரசு பயன்படுத்தும்.

தரவுகளை அணுகும் நிறுவனங்கள் அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு மறுவிற்பனை செய்ய மாட்டோம் என அரசுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

பாதுகாப்பு மீறல்களைச் சமாளிக்க, ஒரு கண்காணிப்பு அமைப்பையும் தகராறு தீர்க்கும் பிரிவையும் புதிய திட்டம் முன்மொழிகிறது.

ஒவ்வொரு அரசுத் துறையிலும் ஒரு தரவு மேலாண்மைப் பிரிவும் தலைமைத் தரவு அதிகாரியும் நியமிக்கப்படுவர்.

மேலும், பாதுகாப்பான தகவல் பகிர்வை எளிதாக்க மாநிலத் தரவுப் பரிமாற்றத் தளம் ஒன்று அமைக்கப்படும்.

புதிய திட்டம் மத்திய அரசின் மின்னிலக்கத் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் இணைந்து செயல்படும். எனினும், தரவுகளின் முழுமையான பாதுகாப்பு என்பது அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, கண்காணிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும்.

குறிப்புச் சொற்கள்
கேரளாதரவுவருவாய்