திருவனந்தபுரம்: உலக வங்கியிடம் ரூ.2,424.28 கோடி கடன் பெற்று ‘கேரள சுகாதாரக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை’ செயல்படுத்த இந்தியாவின் கேரள மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, அம்முடிவு எடுக்கப்பட்டது.
மக்களுக்கு உதவி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் வாழ்நாளையும் உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
“ஏழை மக்களின் நல்வாழ்வில் அதிகக் கவனம் செலுத்தப்படும். மீட்சித்திறன்மிக்க சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பை ஏற்படுத்த இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது,” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது, சுகாதாரப் பராமரிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, பருவநிலை சார்ந்த சுகாதாரப் பிரச்சினைகளைச் சமாளிக்க மேம்பட்ட அணுகுமுறைகளைக் கையாள்வது, உருவெடுக்கும் சுகாதார அச்சுறுத்தல்களைத் திறம்பட எதிர்கொள்வது உள்ளிட்டவையும் அத்திட்டத்தின் குறிக்கோள்களில் அடங்கும்.
மேலும், 24 மணி நேரமும் திறம்படச் செயல்படக்கூடிய அவசரகாலச் சேவைகளை வழங்கவும் கேரள சுகாதாரக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் நோக்கம் கொண்டுள்ளது.
வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்கு மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதில் சிறப்புக் கவனம் அளிக்கப்படும் என்றும் முதல்வர் அலுவலக அறிக்கை தெரிவித்தது.

