திருவனந்தபுரம்: கேரளாவின் தனியார் நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து அவற்றை விற்க அனுமதிக்கும் மசோதாவுக்கு அந்த மாநிலத்தின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் சனிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் ‘கேரள வனத் திருத்தச் சட்ட மசோதா 2025’ என்னும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அறிக்கப்பட்டது.
இதனை முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
மசோதாவை விளக்கிய கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன், “தற்போதைய நிலையில் தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரம் திருட்டு போனால் நில உரிமையாளர் மீதே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதனால் சந்தன மரத்தை நட்டு வளர்க்க யாரும் முன்வருவதில்லை,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “எனவே, மாநில அரசு இந்தச் சட்டத்திருத்தத்தை மேற்கொள்கிறது. அதன்படி, தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அந்த நிலத்தின் உரிமையாளர்கள் வெட்டி, வனத்துறை மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவர்.
“வனத்துறை அனுமதியின் பேரில் மட்டுமே அந்த விற்பனை நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்,” என்றார்.
இந்தியச் சந்தையில் ஒரு கிலோ சந்தன மரம், அதன் தரத்தைப் பொறுத்து, ரூ. 4,000 முதல் ரூ. 7,000 வரை விற்கப்படுகிறது.