கேரள முதல்வர் பதவி: மூவரிடையே போட்டி

கேரள முதல்வர் பதவி: மூவரிடையே போட்டி

2 mins read
37392c23-3c05-46c0-9146-0a0aba75a626
கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக (இடமிருந்து) திரு ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால், வி.டி.சதீஷன் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப்படம்: மனோரமா

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் புதிய முதல்வரையும் அமைச்சர்களையும் தேர்வுசெய்வது தொடர்பில் அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுடன் வியாழக்கிழமை (மே 7) விரிவான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்படும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன் தொடர்பில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களின் கருத்துகளும் அறியப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மொத்தம் 140 தொகுதிகளுக்கு நடந்த கேரளச் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களை வென்றது. குறிப்பாக, காங்கிரஸ் 63 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.

கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களை அக்கூட்டணி முழுமையாகக் கைப்பற்றியது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகிய மூவரில் ஒருவர் முதல்வராக நியமிக்கப்படலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.

அவர்களில் திரு சதீஷனும் திரு சென்னிதலாவும் அண்மைய சட்டமன்றத் தேர்தலில் வென்று எம்எல்ஏக்களாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். திரு வேணுகோபால் ஆலப்புழா தொகுதியின் எம்பியாக இருக்கிறார்.

முன்னதாக, கேரள முதல்வரைத் தேர்வுசெய்யும் பொறுப்பைக் கட்சி மேலிடத்திடம் ஒப்படைப்பது எனத் தீர்மானம் இயற்றப்பட்டது. கேரளச் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தைக் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு அத்தீர்மானம் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, மேலிடப் பார்வையாளர்களான முகுல் வாஸ்னிக்கும் அஜய் மாக்கனும் திரு வி.எம்.சுதீரன், கே.சுதாகரன், ரமேஷ் சென்னிதலா, வி.டி.சதீஷன் உள்ளிட்ட கேரள மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களைக் கலந்தாலோசித்தனர்.

எம்எல்ஏக்கள், கூட்டணிக் கட்சியினரின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, மேலிடப் பார்வையாளர்கள் தங்களது அறிக்கையைக் கட்சி மேலிடத்திடம் தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் அடுத்த கேரள முதல்வர் யார் என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் வென்று, பத்தாண்டுகளாகக் கேரளத்தில் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி இம்முறை 35 இடங்களில் மட்டுமே வென்று, ஆட்சியைப் பறிகொடுத்தது.

குறிப்புச் சொற்கள்