திருவனந்தபுரம்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் கேரள பயணத்திற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் நிதியுதவி செய்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த மாதம் கைதான ஜோதி, ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் ஒளிவழி ஒன்றை நடத்தி வந்தார்.
அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை சோதனை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. புதுடெல்லியிலிருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் துாதரகத்தின் பணியாளர் டேனிஷ் என்பவரின் உதவியுடன் ஜோதி பாகிஸ்தானுக்கு சென்றது கண்டறியப்பட்டது.
மேலும், பாகிஸ்தானில் திருமணம் செய்துகொள்ள அவர் விரும்பியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கேரளாவின் கண்ணூர் வட்டாரத்தில் நடந்த சுற்றுலாத்துறையின் நிகழ்ச்சி ஒன்றில் ஜோதி மல்ஹோத்ரா பங்கேற்றதாகவும் அதற்கான முழு செலவையும் அம்மாநில அரசே ஏற்றதாகவும் பாஜக கூறியுள்ளது.
இதுதொடர்பாக கேரள பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ராவை கேரள சுற்றுலாத் துறையின் நிகழ்ச்சிக்கு அழைத்தது யார்? அத்துறையின் அமைச்சராக இருப்பவர் முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஷ். ஜோதி மல்ஹோத்ரா கேரளா வந்ததற்கான உண்மையான நோக்கம் என்ன? பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவாளிக்குச் சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது ஏன்?,” உள்ளிட்ட கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
ஜோதி மல்ஹோத்ரா தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், கேரள சுற்றுலாத்துறை நிகழ்ச்சியில் அரசின் செலவில் அவர் கண்ணூர் வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.