மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்வர் போராட்டம்

2 mins read
78d7c5f2-803d-44f6-93c5-a476a8b6e7bf
திருவனந்தபுரம் தியாகிகள் நினைவிடத்தின் அருகே ஜனவரி 12ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மலை 5.00 மணி வரையில் மத்திய அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் கேரள அமைச்சர்களும். - படம்: இந்துத் தமிழ் திசை

திருவனந்தபுரம்: மத்திய அரசு நிதிப் பகிர்வில் பாகுபாடு காட்டுவதாகக் கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஜனவரி 12ஆம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் போராட்டம் நடைபெற்றது.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இடதுசாரிக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற்றது.

திங்கட்கிழமை காலை 10 மணியளவில் திருவனந்தபுரம் தியாகிகள் நினைவிடத்தின் அருகே நடந்த போராட்டத்தில் உரையாற்றிய முதல்வர் பினராயி, அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஒரு மாநிலம் அசாதாரண போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது இந்த நில மக்கள் உயிர் வாழ்வதற்கான போராட்டம். அனைத்து அதிகாரங்களும் எங்களின் கைகளில் தான் உள்ளன என்று கூறி மத்திய அரசு நமது உரிமைகளை தன்னிச்சையாகப் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. எப்படியெல்லாம் பொருளாதார ரீதியாகக் கேரளாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணமாக உள்ளது.

கல்வி, சுகாதாரம் உள்பட துறைகளில் கேரள மாநிலத்தின் சாதனைகளை இல்லாமல் ஆக்குவது, நலத் திட்டங்களுக்கு இடையூறு செய்வது, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய திட்டங்களை நிறுத்தி வைப்பது ஆகிய கேரள மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தான் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

பிரதமரின் பெயரில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் கேரளாவில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மத்திய அரசு அவற்றுக்கான நிதியைக்கூட கேரளாவுக்குத் தருவது கிடையாது.

அந்த உரிமைகளைப் பாதுகாக்கவே இந்தச் சத்தியாகிரகப் போராட்டம். மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக மத்திய அரசு வேண்டும் என்றே பல்வேறு தடைகளை உருவாக்கி வருகிறது என்றார் கேரள முதல்வர் பினராயி.

குறிப்புச் சொற்கள்