திருவனந்தபுரம்: கேரளாவில் சென்ற டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
அதில், திருவனந்தபுர மாநகராட்சியைப் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது.
பதவியேற்பின்போது, பாஜகவைச் சேர்ந்த 20 கவுன்சிலர்கள் உள்ளூர் தெய்வங்களின் பெயரில் உறுதிமொழி ஏற்றனர். அது சட்டப்படி செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது.
இதனால் 19 பேர் மீண்டும் முறைப்படி பதவியேற்றனர். ஆனால், 35வது வார்டு கவுன்சிலரான சுகதன், கோயில் திருவிழா மோதல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளதால் பதவியேற்கவில்லை.
தொடர்ந்து கூட்டங்களிலும் அவர் பங்கேற்காததால், அவரைப் பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதையடுத்து, பதவியேற்கச் சிறப்பு அனுமதி கோரி சுகதன் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதி குன்னி கிருஷ்ணன், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த தீர்ப்பை நிராகரிக்கக் கூடாது எனக் கூறி, திருச்சூர் சிறையிலிருக்கும் சுகதன் அங்கேயே மாநகராட்சி கவுன்சிலராகப் பதவியேற்கலாம் என உத்தரவிட்டார்.
மேலும், ஜூலை 14ஆம் தேதி காலை 11 மணிக்குச் செய்தியாளர்கள் முன்னிலையில் இந்த பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறை நிர்வாகம் செய்து தரவேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.


